தைப் பொங்கல் திருநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் ஆயிரம் ரூபாய், பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு நேற்று முதல் வரும் 12ஆம் தேதி வரை 4 நாட்கள், நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் வரும் 13ஆம் தேதி பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. இதனால் மக்கள் நியாய விலைக் கடைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார். 148 நியாய விலைக் கடையில் உள்ள 72 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 8 கோடியை 28 லட்சம் மதிப்புள்ள பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இதில் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணகுமார், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பை பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினார் அதேபோல், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் கோட்டம்பட்டி, ஊத்துக்குளி, சமத்தூர், ரங்கசமுத்தரம், கெங்களப் பாளையம் பகுதிகளில் உள்ள 1000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார். இந்நிகழ்வில், கூட்டுறவு துறை வருவாய்த்துறை அலுவலர்கள், ஒன்றிய பேரூர் கழக ஊராட்சி கழக செயலாளர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ’ஒரு இரவுக்குள் திமுக உரிய இடங்களை ஒதுக்க வேண்டும்’ - எச்சரிக்கை விடுக்கிறாரா சிதம்பரம்