கோயம்புத்தூர்:தைத் திங்கள் முதல் நாளான இன்று (ஜன.15)பொங்கல் விழா உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அதிகாலை முதலில் இருந்தே சூரியனை வழிபட்டு சூரியப்பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
அனைத்து கோயில்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். புதுமணத்தம்பதிகள் 'தல' பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக விவசாயிகள் இந்த ஆண்டு விவசாயம் செழிப்பதற்காக சூரியனை வழிபட்டு அவரவர் இல்லங்களிலும் தோட்டங்களிலும் சூரிய பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. உழவு சிறப்பாக இருக்க வேண்டியும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும் இந்த பொங்கல் விழா நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி மாட்டு வண்டியில் வந்து பொங்கல் விழாவில் பங்கேற்றார். பண்ணை அலுவலகத்தில் சிறுதானியம், பட்டி அமைத்து வைத்து மாடுகளை பாரம்பரிய முறைப்படி அழைத்து பட்டியை மிதிக்க வைத்து விழா நடைபெற்றது.
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜமாப் இசைக்கு ஏற்ப பண்ணைத் தொழிலாளர்கள் நடனமாடினர். பின்னர் பெண்கள் கும்மி நடனம் ஆடினர். இதனைத் தொடர்ந்து பொங்கலை சூரியனுக்கு படையலிட்டு பண்ணை தொழிலாளர்கள் அனைவரும் இறைவனை வழிபட்டனர். மேலும் இந்நிகழ்வில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் பண்ணைத் தொழிலாளர்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்டப் பரிசு பொருட்களை வழங்கி பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!