கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்குள்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் கலீம், சின்னதம்பி, அரிசி ராஜா உள்பட 27 காட்டு யானைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்பேரில் இங்கு ஆண்டுதோறும் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக பொங்கல் விழா நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்தாண்டு டாப்சிலிப் பகுதிக்கு முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகளுடன் பொங்கல் விழா நடைபெற்றது. முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகள் வனத் துறை சார்பில் யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வனத் துறை சார்பில் பொங்கல் வைக்கப்பட்டது. யானைகள் அலங்கரிக்கப்பட்டு அணிவகுத்து நிற்கவைக்கப்பட்டன.
டாப்சிலிப்பில் யானைகள் பங்கேற்ற பொங்கல் விழா வால்பாறை எம்எல்ஏவுக்கு அழைப்பு இல்லை
முகாமில் இருந்த விநாயகருக்கு யானை ஒன்று தன் துதிக்கையால் நீரை பீய்ச்சியடித்து வழிபாடு செய்தது. வேறு இரண்டு யானைகள் கோயில் முன் மண்டியிட்டு வழிபாடு செய்தன. இது அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளை உற்சாகமடைய செய்தது. பின்னர் பொங்கல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யானைகளுக்கு பழம், கரும்பு, சத்துமாவு உணவாக அளிக்கப்பட்டது.
இந்த விழாவில் ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குநர் ராமசுப்பிரமணியம், துணை கள இயக்குநர் கணேசன், வனச்சரகர்கள் மணிகண்டன், காசிலிங்கம், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
டாப்சிலிப்பில் யானைகள் பங்கேற்ற பொங்கல் விழா இதில் வால்பாறை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் (டாப்சிலிப் பகுதிக்குள்பட்ட) அமுல் கந்தசாமியை வனத் துறையினர் அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காளை பிடிவீரருக்கு மோதிரம் வழங்கிய அமைச்சர்