கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கணேஷ், ராஜேந்திரன் ஆகியோர் இந்த விதி மீறல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
இந்நிலையில் தடாகம் செங்கல் சூளைகளில் தொடர்ச்சியாக பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகளவு மண் வெட்டி எடுப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கும் தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து தடாகம் அடுத்த வீரபாண்டி கிராமத்தில் மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை, கோவையில் இருந்து வந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் காற்றில் மாசுவினைக் கண்டறியும் கருவிகள், ஒலி மாசு கண்டறியும் கருவிகளையும் கொண்டு ஆய்வு நடத்தினர். மொத்தம் ஒன்பது இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு இந்த கருவிகள் வீரபாண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது.
கோவையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு இந்த இயந்திரங்கள் மூலம் தொடர்ச்சியாக 8 மணி நேரம் காற்று மாசுபடுவது குறித்து கண்காணிக்கப்படுகிறது. கோவை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ரமேஷ், உதவி இயக்குநர் செல்வராஜ் ஆகியோர் ஆய்வில் உடனிருந்தனர். இந்த பகுதியில் தொடர்ந்து சில தினங்கள் ஆய்வு நடத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு!