நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.
தேர்தல் பார்வையாளர் உத்தரவு பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியின் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சுபிர்குமார் இன்று பொள்ளாச்சியில் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளிடம் தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது, குறிப்பாக ஒவ்வொரு அரசியல் கட்சியினர் வாக்குப்பதிவின்போதும் வாக்கு எண்ணும்போதும் நியமிக்கப்படும் முகவர்கள் குற்ற வழக்குகளில் இல்லாத வாக்காளராக இருக்க வேண்டும்.
கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை உபயோகப்படுத்தக் கூடாது, கோயில், தேவாலயம், மசூதி போன்ற வழிபாட்டுத்தலங்களில் வாக்கு சேகரிக்கக் கூடாது, அரசியல் கட்சியினர் பரப்புரையின்போது உறுதிப்படுத்தாத புகார்களை தனிப்பட்ட முறையில் வைத்து பரப்புரையில் பேசக்கூடாது போன்ற, தேர்தல் விதிமுறைப்படி வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.