பொள்ளாச்சி வனச்சரக பகுதிகுட்பட்ட நெடுங்குன்று, உடும்பன்பாறை, கல்லார் உள்ளிட்ட குடியிருப்புகளைச் சேர்ந்த மலைவாழ் மக்களுக்கான ஆலோசனைக்கூட்டம் பொள்ளாச்சி-17 சார்-ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சசிரேகா தலைமை வகித்தார். இதில் மலைவாழ் மக்களுடன் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் நடராஜன், பொள்ளாச்சி வனவர் பிரபாகரன், வால்பாறை வனவர் ராஜன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மலைவாழ் மக்களுக்குக் குடியிருப்பு, குடிநீர், கழிப்பிடம், மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. அரசு நலத்திட்டங்கள் தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் வழங்கும்போது மலைவாழ் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் எங்கு செல்கிறது எனத் தெரியவில்லை.
சமீபத்தில் சின்கோனா பகுதியில் உடல்நிலை சரியில்லாத மலைவாழ் இனத்தைச் சேர்ந்த ஒருவரைச் சாலை வசதி இல்லாததால் 3 கி.மீ.தூரம் தோழில் சுமந்துசெல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. முதியோர் உதவித்தொகை, ஜாதிச்சான்றிதழ் போன்றவை வழங்குவதில் காலதாமதம் ஆகிறது. வனத்துறையில் பணியாற்றும் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை. வீடுகள் அமைக்க சில நேரங்களில் மேற்கூரைகள் மட்டும் வழங்குகிறார்கள், சில இடங்களில் தளம் மட்டும் அமைத்துத் தருகிறார்கள்.
டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள கோழிகமுத்தி பகுதிக்கு அருகில் உள்ள வனச்சரக அலுவலர் குடியிருப்புக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மலைவாழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஏனென்று கேட்டால் புலிகளுக்குக் கண் கூசும் என்று வனத்துறையினர் கூறுகிறார்கள்.
பெண்கள் காலைக்கடன்களைக் கழிக்கக் கழிப்பிடம் இல்லாததால் மறைவிடம் தேடிச் செல்லும் போது வன உயிரினங்கள் அச்சுறுத்தல் உள்ளது. இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வைத்து மலைவாழ் மக்கள் வருத்தத்துடன் பேசினர். மலைவாழ் மக்கள் கோரிக்கைகளைக் கேட்ட சசிரேகா, கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.