கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் கடந்த முன்று நாள்களுக்கு முன்பு உட்பிரையர் நிறுவனத்திற்குச் சொந்தமான சவராங்காடு எஸ்டேட்டில் உள்ள பெண் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், வால்பாறை மருத்துவக் குழு, வருவாய்துறை, காவல்துறை உயர் அலுவலர்கள் அந்தப் பெண்ணை நேற்று (ஏப்ரல் 21) நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதி முழுமையாக சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பெண் தங்கியிருந்த வால்பாறை காந்திநகர் குடியிருப்புப் பகுதியை துணை ஆட்சியர் வைத்திநாதன், காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன், நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ், வால்பாறை வட்டாட்சியர் ராஜன் ஆகியோர் இன்று நேரில் சென்று அப்பகுதியை ஆய்வு செய்தனர்.