சென்னை: நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், பல மாதங்களாக எவ்வித முன்னேற்றமும் இல்லாதிருந்த நிலையில், நேற்று சிபிஐ அலுவலர்கள் அவ்வழக்கில் தொடர்புடைய மூவரை கைதுசெய்திருப்பது மீண்டும் அந்த விவகாரம் பொதுவெளியில் பேசுபொருளாகியுள்ளது. சிலர் தன்னை கூட்டாக சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அதனைக் காணொலியாக எடுத்துப் பணம் கேட்டு மிரட்டிவருவதாகவும் கடந்த 2018ஆம் ஆண்டு பெண் ஒருவர், காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சபரிராஜன், வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் ஆகியோரை காவல் துறையினர் 2019ஆம் ஆண்டு கைதுசெய்தனர். மேலும், இந்தப் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதைத்தொடர்ந்து, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சிகளும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து விசாரித்து விரைவில் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்என வலியுறுத்தினர்.
சிபிஐக்கு மாற்றம்
இதன்பின்னர், வெளியான காணொலியின் அடிப்படையில், பார் நாகராஜன் உள்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். கைதான, பார் நாகராஜன் சட்டப்பேரவை துணைத் தலைவரான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நெருங்கியவராக இருந்ததால், அதிமுக நிர்வாகிகள் பலருக்கும் இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் எனக்கூறி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.
அதனடிப்படையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அலுவலர்களும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல்செய்துவிசாரணை நடத்திவந்தனர்.
சிபிஐக்கு மாற்றப்பட்டு 2 ஆண்டுகளாக வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாதிருந்த நிலையில், நேற்று ஆச்சிப்பட்டியைச் சேர்ந்த ஹேரன் பால், பைக் பாபு, அருளானந்தம் ஆகிய மூவரை நேற்று திடீரென சிபிஐ அலுவலர்கள் கைதுசெய்தனர். இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளராக இருந்துவந்த அருளானந்தத்தை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிமுக நீக்கியது.
அருளானந்தத்தின் பின்னணி
அருளானந்தம் சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர் எனவும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுகவினருக்கு இருக்கும் தொடர்பை மறைக்கும் முயற்சியில் முதலமைச்சர் ஈடுபடுவதாகவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர்கூட தப்பித்துவிடக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை அருளானந்தம் சந்தித்திருப்பதாகவும், அதனால், எஸ்.பி. வேலுமணியிடமும் விசாரிக்க வேண்டும்எனவும் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கூறியுள்ளார்.
அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் அருளானந்தம் நேற்று கைதுசெய்யப்பட்ட மூவரையும் சிபிஐ அலுவலர்கள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தி 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் எடுத்தனர். அப்போது, நீதிமன்ற வளாகத்தில், திமுக மகளிரணி, மாதர் சங்கத்தினர் குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடுவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திடீர் திருப்பமாக மூன்று பேரை சிபிஐ கைதுசெய்திருப்பதைப் பலரும் வரவேற்றுள்ளனர். இனியாவது விரைந்து விசாரித்து இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்பதும், அப்படி நடந்தால்தான் இதுபோன்ற கொடுங்குற்ற நிகழ்வுகள் நடைபெறுவதைத் தவிர்க்க முடியும் என்பதும் மக்களின் எண்ணமாக உள்ளது.
இதையும் படிங்க:'பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை'