கோயம்புத்தூர்:உலகளவில் ஏறக்குறைய 420 மில்லியன் நபர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் உயிர்களை பலிவாங்கும் இந்த நீரிழிவு நோய், உலகளவில் உயிரிழப்புக்கான முன்னணி காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயால் அதிக அளவில் பாதிக்கப்படும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்படும் இந்தியா: தென்கிழக்கு ஆசியாவில் நீரிழிவு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதன் மக்கள் தொகையில் சுமார் 17% நபர்கள் நீரிழிவு நோயாளிகளாக இருக்கின்றனர். இது 2030ஆம் ஆண்டுக்குள் 19% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை 2045ஆம் ஆண்டுக்குள் 134 மில்லியனாக அதிகரிக்கும் என்று சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் ஆய்வறிக்கையின் மதிப்பீடு தெரிவிக்கிறது.
இந்நிலையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் நபருக்கு ஏற்படும் புண்கள் எளிதில் ஆராது. இதனை குணப்படுத்தும் பெரும்பாலான மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இவை அதிக விலையுடன் எளிய மக்களால் வாங்க முடியாத எட்டா கனியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் சர்க்கரை நோய் புண்கள் குணமாக்க உள்நாட்டிலேயே அதுவும் பொள்ளாச்சியிலேயே மருந்து தயாரிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கலாச்சாரத்துடன் இணைந்த தென்னை பயிர்:உலக அளவில் இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, மலேசியா உள்ளிட்ட 100 க்கும் அதிகமான நாடுகளில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா, கேரளா, தமிழகம், ஆந்திரா ஆகிய பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக அளவில் தென்னை விவசாயம் இந்தியாவில் அதிகமாக உள்ள நிலையில் தொன்மையான கலாச்சாரத்துடன் இணைந்த பயிராகவும் இது இருந்து வருகிறது.
இந்தியா முழுவதும் 18.95 லட்சம் ஹெக்டேர் அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் 16 ஆயிரத்து 940 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் தமிழகத்தில் மட்டும் 4 லட்சம் ஹெக்டேரில் 12 கோடி தென்னை மரங்கள் உள்ளன. இதில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 36 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் 1.5 கோடி தென்னை மரங்கள் உள்ளன.
வீணாகும் தேங்காய் தண்ணீரில் இருந்து நீரிழிவு நோய்க்கான மருந்து: இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உற்பத்தியாகும் தேங்காய்கள் பெரும்பாலும் கொப்பரையாக மாற்றப்படுகிறது. கொப்பரையாக மாற்றப்படும் இடங்களில் உடைக்கப்படும் தேங்காய்களில் உள்ள தேங்காய் தண்ணீர் பயன்பாடின்றி வீணாகிறது. இவ்வாறு கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 20 கோடி லிட்டர் தேங்காய் தண்ணீர் வீணாகிறது.
இப்படி வீணாகும் தேங்காய் தண்ணீரில் இருந்து பொள்ளாச்சியை சேர்ந்த இளைஞர் விவேகானந்தன் என்பவர் சர்க்கரைநோய் புண்களை குணமாக்கும் மருந்தை கண்டறிந்துள்ளார். இவர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்யும் குடும்பத்தை சார்ந்தவர். இவர் கோவையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றின் உதவியுடன் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையும் படிங்க: நாய் வளர்ப்பதால் டிமென்ஷியா அபாயம் குறையுமா? - ஆய்வில் வெளிவந்த தகவல்!