பொள்ளாச்சி வனச்சரக வனப்பகுதிகளுக்குட்பட்ட சேத்துமடை சோதனை சாவடி, போத்தமடை பீட்டில் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள் மழைக்கால ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், வனத்துறை வாகனம் முன்பு வரிப்புலி ஒன்று நடந்து சென்றதைக் கண்டனர். இதையடுத்து காலை போத்தமடை சென்ற வனத்துறையினர் வரிப்புலிகளின் கால் தடங்களை வைத்து, இப்பகுதியில் வரிப்புலியின் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.
வரிப்புலியின் கால் தடங்கள் வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில், "ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வரிப்புலிகளின் எண்ணிக்கை 38க்கும் மேல் இருப்பது பதிவாகியுள்ளது. சேத்துமடை சோதனைச் சாவடி, போத்தமடை பீட்டில் வன விலங்குகள் தண்ணீர் அருந்த வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிக்கு வருகிறது. இதையடுத்து வனப்பகுதியில் வாகனரோந்து பணியின் போது வரிப்புலிகளின் நடமாட்டமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் விரைவில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு, வரிப்புலிகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதுமட்டுமின்றி, சுழற்சி முறையில் வனத்துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்" என தெரிவித்தார்.