பொள்ளாச்சி கோட்டூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு துணை ஆய்வாளர் சம்பந்தம், சங்கம்பாளையம் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அன்வர், ஆக்சன், சர்தார் அலி ஆகிய மூன்று இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அதனைக் கண்ட உதவி ஆய்வாளர் வாகனத்தை நிறுத்த முயன்றார்.
ஆனால் அந்த இளைஞர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் உதவி ஆய்வாளர் கையில் இருந்த லத்தியை வீசினார். பின் லத்தி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதால் நிலை தடுமாறி மூவரும் கீழே விழுந்தனர்.
இதில் சர்தார் அலி காலில் பலத்த காயமும், மற்ற இருவருக்கும் சிறு காயங்களும் ஏற்பட்டன. இதையடுத்து மூவரையும் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் துணை ஆய்வாளரின் அத்துமீறலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில், துணை ஆய்வாளர் சம்பந்தம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் இந்த விபத்து குறித்து இரண்டு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: வாகனத் தணிக்கையின்போது லத்தியை வீசி விபத்தை ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளர்!