கோவை - பொள்ளாச்சி இடையே இருந்த ரோட்டை நான்குவழிச்சாலையாக மாற்றும்பணிக்காக ரூ.560 கோடி ஒதுக்கப்பட்டது. இப்பணி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கபட்டது. தற்போது இந்தப் பணி 80 சதவீதம் நிறைவு பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் தீவிரம்
கோவை: பொள்ளாச்சி - கோவை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் மூன்று மேம்பாலங்கள் மற்றும் ஒரு ரயில்வே மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில்பாளையம் அடுத்து உள்ள முள்ளுபாடி ரயில்வே கேட் மேம்பாலத்தின் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து நேற்று இந்த மேம்பாலத்தை இணைக்கும் இரும்பு இணைப்பு பாலம் பொருத்தும் பணி நடைபெற்றது. அந்த இரும்பு பாலத்தை ராட்சத கிரேன் உதவியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தூணில் பொருத்தினர்.
இதன் காரணமாக நேற்று இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. வாகனங்கள் கோவில்பாளையம் வழியாக மாற்றி விடப்பட்டன. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் மீதமுள்ள பாலங்களின் இணைப்பு பணிகள் முடிக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த பணியை நெடுஞ்சாலை துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் ரயில்வேத் துறை அலுவலர்கள் மேற்பார்வை செய்தனர்.