பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு நான்கு பட்டாலியன் தேசிய மாணவர் படை சார்பில் சிறப்பு பயிற்சி முகாம் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. இதில், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், ஊட்டி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளில் செயல்படும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் -மாணவர்கள் உற்சாகம் - participated college students
கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட சிறப்பு பயிற்சி முகாமில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் தினமும் காலை மாலை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, முதலுதவி, தற்காப்புக்கலை, தீத்தடுப்பு ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த அலுவலர்கள், இராணுவ அலுவலர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும், இந்த பயிற்சியில் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் நடைபெறும் அணிவகுப்பில் பங்கேற்பதற்கான ஒத்திகையும் அளிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று பயிற்சி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல், ஆயுதங்கள் கையாளுதல் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் நிர்ணயிக்கப்பட்ட இடத்தை நோக்கி துப்பாக்கி மூலம் குறிவைத்து குண்டுகளை சுட்டனர். பத்து நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாம் முடிவுற்றதும் டெல்லிக்குச் சென்று அங்கு நடைபெறும் சிறப்பு பயிற்சியில் பங்கேற்க இருப்பதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.