வால்பாறை, கல்லார்குடி பழங்குடியின மக்களுக்கு அவர்களது பாரம்பரிய இடமான தெப்பக்குளம் மேட்டுப் பகுதியை வழங்கிட உடனடியாக நடவடிக்கைக் கோரியும், பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும் வனத்துறையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனக் கோரியும் வனத்துறை அலுவலகம் முன்பு வரும் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) முற்றுகைப் போராட்டம் நடைபெற இருந்தது ,
இந்நிலையில் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கல்லார்குடி பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் போராட்டத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் பொறுப்பாளர்களும் இதனை ஏற்றுக் கொண்டு போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றனர். மேலும், 20 நாள்களுக்குள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படாவிட்டால் வருகிற 24ஆம் தேதி காலை 11 மணி அளவில் வனத்துறை அலுவலகம் முன்பு திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.