பொள்ளாச்சி:பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டைச் சேர்ந்தவர், சாந்தி. இவரது கணவர் நாகராஜ். இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் என 4 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்த நாகராஜ் இறந்துவிட்டார். குழந்தைகளை வளர்க்கவும், குடும்பத்தை நடத்தவும் வழி தெரியாமல் தவித்தார் சாந்தி. கிடைத்த கூலி வேலைகளைச் செய்து வந்த சாந்தி வறுமையில் சிக்கித்தவித்தார்.
அப்போதுதான் துணிந்து ஒரு முடிவை எடுத்தார். தனக்கு மிகவும் விருப்பமான டிரைவிங் தொழிலைத் தேர்ந்தெடுத்து, யாருடைய உதவியும் இல்லாமல் தானே சுயமாக கற்றுக் கொண்டார். முறைப்படி உரிமமும் பெற்றார். வாடகை கார்கள், சரக்கு வாகனங்கள் என தனக்கு வாய்ப்பு கிடைக்கும் வாகனங்களை ஓட்டி வருமானம் ஈட்ட ஆரம்பித்தார். இந்நிலையில்தான் சாந்தியின் திறமை குறித்து புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பொள்ளாச்சி நகராட்சியின் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணனனுக்கு தெரியவந்தது.
100 ஆண்டுகள் பழமையான பொள்ளாச்சி நகராட்சிக்கு முதல் பெண் ஓட்டுநர் என்ற வாய்ப்பை சாந்திக்கு நகராட்சித் தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் ஏற்படுத்திக் கொடுத்தார். இதுகுறித்து சாந்தி கூறுகையில், "கணவரை இழந்து நான்கு குழந்தைகளுடன் வசிக்கிறேன். கூலி வேலை செய்ததில் கிடைத்த வருமானத்தைக்கொண்டு குடும்பம் நடத்த முடியவில்லை. அப்போதுதான் எனக்கு பிடித்த டிரைவர் வேலையைச் செய்வது எனத் துணிந்து முடிவெடுத்தேன்.