கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அகதிகள் முகாமை சேர்ந்த பிரான்சிஸ், கடந்த 30 ஆண்டுகளாக ஆழியார் அணையில் ஒப்பந்த அடிப்படையில் படகோட்டியாக பணியாற்றி வந்தார்.
கடந்த ஒரு வாரமாக வால்பாறை, ஆழியார் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஆழியார் அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் படகுகளை அணையின் நடுப்பகுதியில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் படகுகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அலுவலர்கள் தேங்கி நிற்கும் தண்ணீரை இறைக்க படகோட்டி பிரான்ஸுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
படகோட்டி மாயம், உடலை மீட்க அலுவலர்கள் அலட்சியம் இதனால் பிரான்சிஸ் இயந்திர படகில் தேங்கியுள்ள தண்ணீரை இறைப்பதற்காக 13ஆம் தேதி "மிதி படகில்" சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் விழுந்து பிரான்சிஸ் தத்தளித்துக் கொண்டுள்ளார். அவரது சத்தம் கேட்ட சுற்றுலா பயணிகள் அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அலுவலர்கள் வருவதற்குள் பிரான்சிஸ் தண்ணீரில் மூழ்கி விட்டார். நேற்று அவரது உடலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இதுவரை அவரது உடல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது உறவினர்கள், தண்ணீரில் மூழ்கியும் இதுவரை அவரின் உடலை மீட்காமல் அலுவலர்கள் மெத்தனமாக பதில் கூறி வருகின்றனர். படகோட்டிக்கே இந்த நிலைமை என்றால், சுற்றுலாப் பயணிகள் அணையில் விழுந்தால் அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
மேலும், பிரான்சிஸ் உறவினர்கள் அவரது உடலை விரைந்து மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.