பொள்ளாச்சியை அடுத்த டாப் சிலிப் பகுதிக்கு ஆண்டு தோறும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்காக வனத்துறையின் இணையதளம் மூலம், சுற்றுலாப் பயணிகள் அங்கு தங்குவதற்கு முன்பதிவுகளை செய்து வந்தனர்.
மேலும், வனத்தை சுற்றிப்பார்க்க, கும்கி யானை சவாரியையும் வனத்துறை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பயணிகள் தங்கவும் வனத்தையும், வனவிலங்குகளை கண்டு ரசிக்கவும், அம்புலி, டிரீ டாப், பைசன் மற்றும் மூங்கில் இல்லம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் விதவிதமான தங்கும் விடுதிகளை அமைத்து பராமரித்து வருகின்றனர். விடுதிகளின் வசதிக்கேற்ப இங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்நிலையில், கடந்த ஒன்பது மாதங்களாக கரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் வனத்துறைக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.