கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசுகையில், 'சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ப்ரொபஷனல் ஆக இல்லை. அதனை வைத்து அரசியல் செய்யலாம் என நினைத்தால் அது சட்டப்பேரவையில் எடுபடாது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
காவல் துறையினர் இதனை பாடமாக வைத்துக்கொண்டு கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்.
அப்போது, சட்டப்பேரவையில் அதிமுகவின் இருக்கை பிரச்னை தொடர்பான பதில் அளித்த அவர், 'இது கட்சி சார்ந்த பிரச்னை. மேலும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை வைத்து அதன் அடிப்படையில் சபாநாயகர் நடுநிலையாக செயல்பட வேண்டும். இந்தியாவில் உள்ள பின்னலாடைத் தொழில் அதிகமாக கொங்கு பகுதியில் உள்ளது. தற்போது 40% ஆர்டர்கள் குறைந்துள்ளன. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு விரைந்து தொழிலை மீட்டெடுக்கவும் தொழிலாளர்களின் வாழ்வாரத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
90% பணிகள் முடிந்ததாக கூறப்படும் அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டம் ஏன் இன்னும் முடிவடையவில்லை?. பரம்பிக்குளம் அணையில் 12 டிஎம்சி நீர் வீணாகியுள்ளது. இனி இது போன்று நடக்கக் கூடாது. செங்கல் சூளைகளுக்காக செம்மண் அள்ளுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.