கோயம்புத்தூர்: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட, பாலமலை அடுத்த பசுமணி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கால்நடைகள் வளர்ப்பு, வனத்திற்குள் தேன் மற்றும் மூலிகை செடிகளை சேகரித்து விற்பனை செய்தல் மற்றும் விவசாயத்தை பிரதானத் தொழிலாக செய்து வருகின்றனர்.
அடர்ந்த வனப்பகுதிக்குள் வசிக்கும் இவர்கள் முக்கிய நிகழ்வுகளுக்காக மட்டுமே நகர் பகுதிக்கு வருகின்றனர். இந்நிலையில் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நக்சல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், பாலமலை பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பசுமணி கிராமத்திற்கு அருகே வனப்பகுதியில், கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர், அங்கு காய்கறி செடிகளுக்கிடையே பயிரிடப்பட்டிருந்த 15 கிலோ மதிப்புள்ள 300 கஞ்சா செடிகளை பிடுங்கி, தீயிட்டு அழித்தனர்.