தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாக்கடை கட்டுவதற்கு போலீஸ் பாதுகாப்பு.. கோவையில் நடப்பது என்ன? - drainage built police protection

கோவை அருகே கழிவு நீர் வடிகால் கட்டும் பணி மூன்று மாதங்களுக்குப் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

சாக்கடை கட்டுவதற்கு போலீஸ் பாதுகாப்பு.. கோவையில் நடப்பது என்ன?
சாக்கடை கட்டுவதற்கு போலீஸ் பாதுகாப்பு.. கோவையில் நடப்பது என்ன?

By

Published : Jun 21, 2023, 1:14 PM IST

கோவை அருகே கழிவு நீர் வடிகால் கட்டும் பணி மூன்று மாதங்களுக்குப் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது

கோயம்புத்தூர்:கோவை அடுத்த அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டு பூலுபாளையம் என்ற கிராமம் உள்ளது. இங்கு அருந்ததியின மக்கள் வசித்து வருகின்றனர். இவ்வாறு இவர்கள் வசிக்கக் கூடிய இடத்தில் கழிவு நீர் வடிகால் கட்டும் பணி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஏ.டி.காலனி பகுதியில் தொடங்கியது.

ஆனால், சாக்கடை கழிவு நீர் கால்வாய் தங்கள் பகுதி வழியாக வந்தால் கொசுவால் தொற்று நோய்கள் ஏற்படும் எனக் கூறி ஒரு தரப்பினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் கால்வாய் அமைக்கும் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பாக இரு தரப்பினரிடமும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து மூன்று முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பின்னர், இதன் அடிப்படையில் ஏற்பட்ட உடன்பாட்டின் பேரில் வடிகால் கட்டும் பணி தொடங்கியது. அப்போது, ஒரு தரப்பினர் மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களது வழித்தடத்தில் வடிகால் கட்டுவதை எதிர்த்து கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து ஒரு தரப்பினர் மனு அளித்து உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட காவல் துறையினரின் பாதுகாப்புடன் நேற்று (ஜூன் 20) கழிவு நீர் வடிகால் கட்டும் பணி தொடங்கியது. இந்த நிலையில், இன்றும் அதே போலீஸ் பாதுகாப்புடன் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.

4 அடி அகலம், 3 அடி ஆழத்திற்கு குழி தோண்டும் பணி ஊருக்குள்ளும், ஊரில் இருந்து கிழக்கே குட்டைக்குச் செல்லும் வழியிலும், பொக்லைன் இயந்திரங்கள் உதவி உடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி நேரில் ஆய்வு செய்தார். அப்போது, விரைவில் குழி தோண்டப்பட்ட இடத்தில் ஊருக்குள் வரும் வழித்தடத்தில் இருக்கும் வடிகாலுக்கு கான்கிரீட் போடும் பணி நடைபெறும் எனவும், பணி விரைவில் முடிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அன்னூர் பொறுப்பாளர் ராமன் கூறுகையில், “அருந்ததியின மக்கள் வசிக்கக் கூடிய பகுதியில் இருந்து சாக்கடை கழிவு நீர் உயர் சாதியினர் வசிக்கக் கூடிய பகுதி வழியாகச் செல்வதால், சாக்கடை கால்வாய் அமைக்க அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இது நவீன தீண்டாமை ஆகும்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை முறையிட்டு நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இருப்பினும், அவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் காவல் துறை பாதுகாப்புடன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை மீண்டும் தடுக்க முற்பட்டால் அனைத்து இயக்கங்களையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்போம்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து அப்பகுதியில் அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:"நீ வா பார்த்துக் கொள்ளலாம்" - கைகலப்பாக மாறிய முகநூல் வாக்குவாதம்... நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details