கோயம்புத்தூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுக்களை அளித்தனர். இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். அதே சமயம் அசம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல் துறையினர் பொதுமக்களையும் அவர்களது உடைமைகள் அனைத்தையும் சோதனை மேற்கொண்ட பிறகே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிப்பர்.
கடந்த வாரம் பொங்கல் பண்டிகை விடுமுறை என்பதால் இன்றைய தினம் அதிக அளவிலான பொதுமக்கள் மனு அளிக்க வந்த வண்ணம் உள்ளனர். இன்னும் இரண்டு தினங்களில் குடியரசு தின விழா கொண்டாட உள்ளதை ஒட்டியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மனு அளிக்க வரும் பொதுமக்களின் உடைமைகள் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது.