கோயம்புத்தூர்: பேரூர் அருகே தீத்திப் பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சரவணன் ஈரோடு மாவட்டம் தாளவாடி மல்லாங்குழியில் ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார். இவர் யாகம், வேள்வி ஆகியவற்றை வெளிநாடு, வெளி மாநிலம், தமிழகம் முழுவதும் சென்று மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 7ஆம் தேதி இவர் ஈரோட்டில் இருந்து தனது வீட்டிற்கு வந்து இருந்தார். 8ஆம் தேதி காலை சரவணன் தனது வீட்டு முன்பு நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு காரில் அடையாளம் தெரியாத ஐந்து பேர் வந்தனர். அவர்கள் இவரது அருகில் வந்து தாங்கள் காவல் துறை என அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் உங்கள் மீது பேரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி இருப்பதாகவும் வழக்கு விசாரணைக்கு உடனடியாக வருமாறு அழைத்துள்ளனர்.
அதற்கு சரவணன் அடையாள அட்டையை காட்டுங்கள், நான் வருகிறேன் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் சரவணனை தாக்கியுள்ளனர். மேலும் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி காரில் கை, கால்களை கட்டி போட்டு கடத்திச் சென்றனர். பின்னர் அவரை பழனி மலை அடிவாரத்திலுள்ள சாரதா ஆசிரமத்தில் அடைத்து வைத்தனர். அங்கு வைத்து அவரை தாக்கி துன்புறுத்தினர்.
பின்னர் சரவணனின் செல்ஃபோனை பறித்து அவரது மனைவியை தொடர்பு கொண்டு உங்களது கணவரை கடத்தி வைத்துள்ளோம். அவர் உங்களுக்கு உயிரோடு வேண்டுமென்றால் 1 கோடி பணம் மற்றும் 100 பவுன் தங்க நகைகள் வேண்டும் எனக்கூறி செல்போன் இணைப்பை துண்டித்து விட்டனர். சிறிது நேரத்துக்குப் பின்னர் அவரை மீண்டும் தொடர்பு கொண்டு நாங்கள் சொல்லும் இடத்திற்கு உடனடியாக பணத்துடன் வரவேண்டும் எனவும் இந்த விஷயங்களை போலீசில் சொன்னால் உங்களது கணவர் உயிரோடு இருக்கமாட்டார் எனக் கூறி மிரட்டினர்.