கோயம்புத்தூர்:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படை காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் செந்தில்குமாரிடம் தனிப்படை காவல் துறையினர் நேற்று (ஜூலை 07) விசாரணை மேற்கொண்டனர். ‘செந்தில் பேப்பர் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான செந்தில்குமார், அதிமுக தலைமையுடன் மிக நெருக்கமாக இருந்தவரான மணல் ஓ.ஆறுமுக சாமியின் மகன்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் மிகவும் சக்தி வாய்ந்த நபராக வலம் வந்தவர். தமிழ்நாடு முழுவதும் ஆறுகளில் மணல் எடுக்கும் பணிகளை செய்து வந்தவர். ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு மிக நெருக்கமானவராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தவர் ஓ. ஆறுமுகசாமி. பேப்பர், ஸ்டீல் , பழங்கள், கட்டுமானம் என பல்வேறு தொழில்களில் ஓ.ஆறுமுகசாமியும் அவரது மகன் செந்தில்குமாரும் முதலீடு செய்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவத்தின் பொழுது கோடநாடு பங்களாவில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.