கோயம்புத்தூர்:தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் பணிச்சுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்படுவதால் அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் வாரம் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும் என காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு கடந்த 2021ஆம் ஆண்டு, ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் காவலர்களின் பிறந்தநாள், திருமண நாளன்று குடும்பத்துடன் நேரம் செலவிடும் வகையில் விடுப்பு வழங்கப்பட வேண்டும்; வார விடுமுறை தேவைப்படவில்லை எனத் தெரிவிக்கும் காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதியன்று நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசுகையில், 'காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும்' என்று அறிவித்தார்.
இதனை செயல்படுத்தும் விதமாக, இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க உத்தரவிட்டு, அதற்கான அரசாணையையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2021 நவம்பர் 3ஆம் தேதி வெளியிட்டார். காவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, காவல் துறையில் ஓய்வில்லாமல் சவாலான பணிகளை எதிர்கொள்ளும் காவலர்கள் புத்துணர்ச்சியோடும், பணியாற்ற வழிவகுக்கும் என காவலர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது.