தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிசிடிவி: போலீசை பார்த்து தெறித்து ஓடிய திருடர்கள்... ரத்தம் சொட்டிய நிலையிலும் துரத்திப் பிடித்த காவலர்! - Annur Bus Stand

கோயம்புத்தூர்: அன்னூர் பேருந்து நிலையத்தில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு திருடர்களை காவலர்கள் துரத்திச் சென்று கைது செய்தனர்.

கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்

By

Published : Jan 24, 2021, 7:51 PM IST

பிகார் மாநிலம் யஷ்வந்த்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாகுமார். இவர் அன்னூர் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று காலை அன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்து அவிநாசி செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது அவருடைய செல்போன் திடீரென மாயமானது. இதனையடுத்து அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து பேருந்துக்காக காத்திருந்த மற்றொரு பயணியின் செல்போன் மாலையில் திருடப்பட்டது. இதுகுறித்த தகவல் அன்னூர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அன்னூர் காவல் நிலைய தலைமைக் காவலர் மணிகண்டன், நுண்ணறிவு பிரிவு காவலர் கருணாகரன் ஆகியோர் இரவு 9 மணி அளவில் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் பதில் அளித்துள்ளனர்.

சேகுதாவூத், ஆறுமுகம்

ஒருகட்டத்தில் திடீரென அங்கிருந்து இருவரும் தப்பி ஓடினர். இதனையடுத்து காவலர் மணிகண்டன் தப்பியோடிய நபர்களை துரத்தும் முயற்சியின்போது நிலை தடுமாறி சாலையில் கீழே தவறிவிழுந்த நிலையிலும், தப்பி ஓடிய நபர்களில் ஒருவரை பிடித்தார். மற்றொரு நபரை காவலர் கருணாகரன் துரத்திப் பிடித்து அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், இருவரும் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், சேகுதாவூத் என்பது தெரியவந்தது. இவர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சிசிடிவி காட்சி

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 8-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டு தலைமறைவான குற்றவாளிகள் என விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவலர்கள் அவர்களிடமிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட செல்போன்களையும், மறைத்து வைத்திருந்த கத்தியையும் பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி சிறையில் அடைத்தனர்.

திருடர்களை பிடிக்கும் முயற்சியில் கீழே விழுந்து காயமடைந்த காவலர் மணிகண்டன்

சிசிடிவி

இதனிடையே காவலர்கள் மணிகண்டன், கருணாகரன் ஆகியோர் செல்போன் திருடர்களை துரத்திச் சென்று பிடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. உரிய நேரத்தில் செல்போன் திருடர்களை கண்டுபிடித்து கைது செய்த அன்னூர் காவல்துறையினருக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:காவல் துறையினருக்கு குட்பை சொல்லி குற்றவாளி எஸ்கேப்!

ABOUT THE AUTHOR

...view details