தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குற்றங்கள் குறைவு - மாநகர காவல் ஆணையாளர் தகவல் - crime rate in coimbatore

Coimbatore crime report 2023: இந்த ஆண்டு காவல்துறை சார்பில் மாவட்டத்தில் குற்றங்களை குறைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவையில் கடந்தாண்டை விட குறைந்துள்ள சட்டஒழுங்கு குற்றங்கள்
கோவையில் கடந்தாண்டை விட குறைந்துள்ள சட்டஒழுங்கு குற்றங்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 6:40 PM IST

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

கோயம்புத்தூர்: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகர காவல் துறை சார்பில் இந்த ஆண்டு எடுக்கப்பட்ட பல்வேறு முன்னெடுப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "கோவை மாநகரில் இந்த வருடம் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள், சட்டஒழுங்கு பிரச்னைகள் ஆகியவற்றை காவல்துறை எவ்வாறு கையாண்டது என்பது பற்றிய ஆய்வு இன்று (டிச.30) நடத்தப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்த வருடம் ஆதாய கொலை வழக்கு எதுவும் இல்லை.

கூட்டுக் கொள்ளை கடந்த வருடத்தில் 11 வழக்குகள் இருந்த நிலையில், இந்த வருடம் மூன்று வழக்குகள் மட்டும் பதிவாகி, மூன்று சம்பவத்திலும் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழிப்பறியைப் பொறுத்தவரையில், கடந்த வருடம் 187 வழக்குகள் பதிவான நிலையில், இந்த வருடம் 58 சதவிகிதம் குறைந்து, 78 வழக்குகள் மட்டும் பதிவாகி உள்ளது.

சட்டஒழுங்கு பிரச்னைகளில் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, நுண்ணறிவுப் பிரிவின் முன்னறிவிப்பை முறையாக ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கைகள் எடுத்ததன் பயனாக, பெரியளவில் எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்னைகளும் இல்லை. சட்ட ஒழுங்கு தொடர்பான வழக்குகளைப் பொறுத்தவரையில், கொலை வழக்குகளில் 22 வழக்குகளே பதிவாகியுள்ளது. கொலை முயற்சி வழக்குகளைப் பொறுத்தவரை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 45 சதவீதம் குறைந்து 35 வழக்குகள் மட்டும் பதிவாகி உள்ளன.

மேலும், கலகம் செய்யும் வழக்குகளைப் பொறுத்தவரை 13 வழக்குகள் மட்டும் இந்த ஆண்டு பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, காயம் ஏற்படுத்தும் வழக்குகள் கடந்த ஆண்டு 517 ஆக பதிவாகி இருந்த நிலையில், இந்த வருடம் 37 சதவிகிதம் குறைந்து 324 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. குற்ற வழக்குகளையும், சட்ட ஒழுங்கு வழக்குகளையும் பார்க்கும்போது, கடந்த வருடத்தை விட இந்த வருடம் தடுப்பு நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நவீன தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள், நம் கோவை நம் பாதுகாப்பு என்ற டேக் லைன் மூலம் தெருக்களில் உள்ள வணிக நிறுவன மக்களை அணுகி, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும், Hot Spot என்ற சட்டஒழுங்கு பிரச்னைகள் பதிவான இடங்களை ஆய்வு செய்து, அந்த இடங்களில் ரோந்துப் பணிகளை அதிகப்படுத்தியதன் மூலம், குற்ற வழக்குகள் குறைந்துள்ளது" எனத் தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய அவர், "மேலும் 1,200 பிடியாணைகளை நிறைவேற்றி இருப்பதாகவும், குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை, 89 வழக்குகள் இந்த ஆண்டு போடப்பட்டுள்ளது. குண்டர் சட்டங்களை போடும் எண்ணம் இல்லை. ஆனால், பொருள் தொடர்பான வழக்குகளில் கடந்த வருடம் 16 நபர்கள் இருந்த நிலையில், இந்த ஆண்டு 25 பேர்களாக அதிகரித்துள்ளதன் காரணமாக சட்டங்களை போடப்படுகிறது. சாலை விபத்துகளைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு 263 விபத்துக்கள் நடந்தது. இந்த ஆண்டு 255 விபத்துக்கள் நடந்துள்ளது.

சாலை விபத்துகளில் இறந்தவர்களைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு 272 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு 261 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சாலை விபத்துகளை மீறுபவர்கள் மீது பதியப்படும் வழக்குகள் இந்த ஆண்டு குறைந்துள்ளது. ஆனால், அபராதம் விதிப்பைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு 9 கோடி இருந்த நிலையில், இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கஞ்சா, குட்கா போன்ற வழக்குகளைப் பொறுத்தவரையில், பல்வேறு நபர்கள் இணைந்து செயல்பட்டதன் அடிப்படையில், 63 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, லாட்டரி வழக்குகளும் இந்த ஆண்டு பதியப்பட்டுள்ளது.

சைபர் கிரைம் வழக்குகளைp பொறுத்தவரை, இந்த ஆண்டு மட்டும் 6 ஆயிரத்து 248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 4 ஆயிரத்து 276 வழக்குகள் பணம் தொடர்பான பிரச்னைகள் உள்ளடக்கியது. ஆயிரத்து 972 வழக்குகள், இதர சைபர் கிரைம் வழக்குகளாக பதியப்பட்டுள்ளது.

மேலும், இதில் 201 முதல் தகவல் அறிக்கை போடப்பட்டு, 46 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 28 கோடி ரூபாய் பணத்தை குற்றவாளிகள் கையில் சென்று சேராமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு கோடி ரூபாய் பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி, கோவை மாநகரில் U Turn, Remote Signal, Speed Radar Gun, காவலர்களுக்கான ஊக்குவிப்பு பயிற்சிகள், காவல் வனம் போன்ற பல்வேறு செயல்முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், Speed Radar Gun மூலம் 476 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மேலும், 14 Boys and Girls Club இருந்த நிலையில், இந்த வருடம் மட்டும் புதிதாக 9 Club திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை மாநகரில் இந்த ஆண்டு 2ஆயிரத்து 300 சிசிடிவி கேமராக்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சாலைகளை நோக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முயற்சிகள் குற்றங்களைத் தடுப்பதற்கும், சட்டஒழுங்கு பராமரிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். 'போலீஸ் அக்கா' என்ற திட்டத்தின் கீழ், 300க்கும் மேற்பட்ட அழைப்புகளை ஏற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 'போலீஸ் Bro' என்ற திட்டமும் கோவை மாநகரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

இதைத் தொடர்ந்து, 326 மாணவர்களை 'ஆபரேஷன் ரீபூட்' திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்புகளை மீண்டும் தொடர செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில், இந்த ஆண்டு சட்டஒழுங்கு பிரச்சனைகள் முறையாக பராமரிக்கப்பட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் வரக்கூடிய 2024ஆம் ஆண்டு முக்கியமான சவாலாக, போதைப்பொருள் தடுப்பு பார்க்கப்படுகிறது. விபத்துகளை குறைப்பதற்கும், குற்றங்களை குறைப்பதற்கும் சிசிடிவி கேமராக்கள் அதிகப்படுத்தப்படும். மேலும் அடுத்த ஆண்டு இவைகளில் அதிக கவனம் செலுத்த உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:திருவாரூர் மாவட்ட குற்றங்களின் ஆண்டறிக்கை! அதிரடி காட்டிய மாவட்ட எஸ்.பி.

ABOUT THE AUTHOR

...view details