தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா போதையில் கத்தியுடன் சுற்றிய இளைஞர்கள் - ரவுண்டுகட்டி பிடித்த பொதுமக்கள் - கஞ்சா போதையில் கத்தியுடன் இளைஞர்கள் ரகளை

கோயம்புத்தூரில் கஞ்சா போதையில் ஊருக்குள் அரிவாள், கத்தியுடன் சுற்றித் திரிந்த இளைஞர்களை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து சரமாரியாக அடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

போதை இளைஞர்களை விரட்டிப் பிடித்த மக்கள்
போதை இளைஞர்களை விரட்டிப் பிடித்த மக்கள்

By

Published : May 8, 2022, 11:09 PM IST

கோயம்புத்தூர்: நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பி&டி காலனியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். தனியார் நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்லும் இவர் தனது வீட்டின் அருகேவுள்ள வீடுகளை இளைஞர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அதில் பனியன் தொழிற்சாலைக்கு வேலைக்குச்செல்லும் திருநெல்வேலியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர் குடியிருந்து வருகிறார்.

இவருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் இவரது நண்பர்களான திருநெல்வேலியைச் சேர்ந்த ஹரிஹரன், முத்துவேல், சங்கர், ராஜா, முருகன் ஆகியோர் இவரது வீட்டிற்கு வந்து இரவு முழுவதும் மது அருந்தியும், கஞ்சா பயன்படுத்திக்கொண்டும் போதையில் கத்தியபடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை வீட்டின் உரிமையாளர் சண்முகசுந்தரம் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் இன்று (மே 08) காலை சிவா திருநெல்வேலிக்குச்சென்ற நிலையில் போதை மயக்கத்திலிருந்த அவரது நண்பர்கள் ஐந்து பேரும் அரிவாள், கத்தி, கம்புகளுடன் இவர்களைக் கண்டித்த வீட்டின் உரிமையாளர் சண்முகசுந்தரம், அவரது மனைவி பூர்ணிமா மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனைப்பார்த்து தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரரான ஷ்யாம் என்பவரையும் துரத்தி துரத்தி தாக்கியுள்ளனர்.

கவுன்சிலரை வெட்டத்துடித்த கஞ்சா கோஷ்டியினர்:இதில் அவருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. போதை தலைக்கு ஏறிய நிலையில் வீதியில் அரிவாளுடன் சுற்றிய ஐந்து பேரும் அங்கிருந்த பொதுமக்களையும் மிரட்டி, எதிரில் சாலையில் வந்து கொண்டிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. மேலும், அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் முத்துலட்சுமியைத் தாக்கியதுடன், அவரை அரிவாளால் வெட்ட துரத்தியுள்ளனர்.

அவர் வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டதால் அவர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னம் தலைமையிலான காவல் துறையினர், நூற்றுக்கும்மேற்பட்ட பொதுமக்கள் இவர்களைப் பிடிக்க முயன்றனர்.

அப்போது அருகில் இருந்த ராவத்தகொல்லனூர் பள்ளம், கே.எஸ்.பி பள்ளம் வழியாக தப்பித்து ஓடினர். பொதுமக்கள் தொடர்ந்து அவர்களை துரத்தியதால் தென்றல் நகரில் உள்ள தென்னந்தோப்பு புதர்களுக்குள் புகுந்து மறைந்து கொண்டனர். ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நான்கு புறமும் சுற்றி வளைத்து இளைஞர்களைத் தேடினர். அருகில் சென்றவர்களை 5 பேரும் தாங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்ட முற்பட்டனர்.

போதை இளைஞர்களை விரட்டிப் பிடித்த மக்கள்

இறுதியில் இவர்களை பொதுமக்கள் பிடித்து அடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கிட்டத்தட்ட 3 மணிநேரம் நடந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேருக்கும் பொதுமக்கள் தாக்கியதில் பலத்தகாயம் ஏற்பட்டது. இவர்களும், படுகாயமுற்ற பொதுமக்களும், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆசைக்கு இணங்க மறுத்த திருநங்கைக்கு கத்திக்குத்து - குற்றவாளிகள் கைது

ABOUT THE AUTHOR

...view details