ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக நிர்வாகிகள் குண்டுகட்டாக கைது கோயம்புத்தூர் : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு புதிய கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்தாண்டு காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவமனையில் வால்பாறை, உடுமலை, கோமங்கலம் பகுதியில் இருந்து பரிசோதனைக்காக தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பாஜக சார்பில் பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு உள்ளதாகவும், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாக குற்றம் சாட்டி காவல்துறையினர் அனுமதியின்றி மாவட்டச் செயலாளர் வசந்த ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஏ.எஸ்.பி முரளி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டனர். மாலை 4 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 5 மணி வரை மாவட்டச் செயலாளர் வராததால் போலிசார் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவிருந்த நகரச் செயலாளர் பரமகுரு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரையும் போலிசார் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதையும் படிங்க:பயணிகளிடம் தகாத வார்த்தையில் பேச்சு - ஓட்டுநர், நடத்துநரின் உரிமம் ரத்து! அமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் தீர்வு!