கோயம்புத்தூர்: பீளமேடு பகுதியில் வீடு புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அவரிடமிருந்து நகை, பணம், வாகனம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து செய்தியாளர் சந்திப்பு கோவை மாநகர காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இது குறித்து கோவை மாநகர துணை கமிஷனர் சந்தீஷ் கூறுகையில், "பீளமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது.
இந்த சம்பவங்கள் வாரயிறுதி நாட்களில், தனியாக இருக்கும் வீடுகளை மட்டுமே டார்க்கெட் செய்து நடந்து வந்தது.
ஆனால் சிசிடிவி கேமராக்களில் சிக்காமலும், திருடும் வீடுகளில் கைரேகை கூட கிடைக்காத வகையில் திருட்டு சம்பவங்கள் இருந்தது. மேலும் திரைப்படத்தில் வரும் திருட்டு சம்பவம் போல அனைத்து கொள்ளை சம்பவங்களும் ஒரே மாதிரி இருந்தது. அதனைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில், ஏசி பார்த்திபன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் மீனாம்பிகா, மரியமுத்து ஆகியோர் அடங்கிய 2 சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் இந்த குழுவினர் அப்பகுதியில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களுக்கு மேல் ஆய்வு செய்தனர். அப்போது, சம்பவம் நடந்த நாட்களில் ஒரே நபர் பைக்கில் அடிக்கடி சென்றது தெரியவந்தது. அவர் அன்னூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் அடிக்கடி பெட்ரோல் போட்டு வந்துள்ளார்.