கோவை: கரோனா காலத்திற்குப் பிறகு கல்லூரி மாணவிகள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். பாலியல் துன்புறுத்தல்கள், ஒரு தலைக்காதல், குறிப்பாக சமூகவலைதளங்கள் மூலம் சந்திக்கும் பிரச்சினைகளால் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுவதால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதற்கு அவர்களுக்குச் சரியான நேரத்தில் ஆலோசனைகள் கிடைக்காதது முக்கிய காரணமாக அமைகிறது. இந்நிலையில் இவற்றிலிருந்து கல்லூரி மாணவிகளைக் காப்பதற்காகக் கோவை மாநகர காவல்துறை சார்பில் ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாநகரத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் பெண் காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் நேரடியாக மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இது குறித்து காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில் “கோவை மாநகரத்தில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் நலனுக்காக ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் தகுதி வாய்ந்த 37 பெண் காவல் துறையினர் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கல்லூரி மாணவிகளின் சூப்பர் ஹீரோ இவர்கள் கல்லூரி மாணவியர்களை அடிக்கடி சந்தித்து கலந்துரையாடுவது, மாணவியர்கள் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்வது, மாணவியர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கும், பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.
கல்லூரிகளில் நடக்கும் கருத்து மோதல்கள், போதைப்பொருள்கள், சைபர் குற்றங்கள் போன்ற அனைத்துப் பிரச்சினைகளையும் சம்மந்தப்பட்ட துறையினரின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண்பார்கள். மாணவிகளுக்கு நல்ல சகோதரிகளாகச் செயல்படும் இவர்கள், மாணவியர்களின் தகவல்களை ரகசியமாகப் பாதுகாத்து நடவடிக்கை எடுக்கச் செய்வார்கள்” எனத் தெரிவித்தார்.
இத்திட்டம் குறித்து மாணவிகள் கூறுகையில், “கல்லூரிக்கு வரும் நாங்கள் வீட்டிலிருந்து கிளம்பி கல்லூரி வரும் வரையிலும் சில சமயங்களில் கல்லூரிகளிலும், பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கிறோம் . இதனைப் பெற்றோர்களிடமோ உறவினர்களிடமோ சொல்ல முடியாத சூழல் ஏற்படும்போது எங்களின் குறைகளைக் கேட்கக் காவல் துறை இருக்கிறது.
போலீஸ் அக்கா திட்டம் குறித்து பேசிய கல்லூரி மாணவி அதுவும் எங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய பெண் காவலர்கள் இருப்பதால் தைரியமாக அவர்களிடம் கூற முடியும். அதே சமயம் தங்களுடைய அடையாளங்கள் வெளியே தெரிய வாய்ப்பில்லை என்பதால் பாதிக்கப்படும் பெண்கள் காவலர்களை தங்களுடைய சகோதரிகளாகக் கருதி அனைத்து பிரச்சினைகளையும் வெளிப்படையாகக் கூற முடியும்” எனத் தெரிவித்தனர்.
மேலும், பெண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க இத்திட்டத்தைக் கொண்டுவந்துள்ள மாநகர காவல் துறைக்கு நன்றியைத் தெரிவிப்பதாக கூறினர். முன்னதாக "போலீஸ் அக்கா" திட்டத்தை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைத்து மாணவிகளிடம் காவல் ஆணையர் உரையாற்றினார். இதில் துணை ஆணையர் சுகாசினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
போலீஸ் அக்கா திட்ட தொடக்க விழா இதையும் படிங்க:காஞ்சியில் காவலர் பயிற்சி நிறைவு விழா- காவல் ஆணையர் அமல்ராஜ் அறிவுரை