கோயம்புத்தூர்:கோவை மத்திய சிறையில் பணியில் இருந்த போக்சோ கைதி தப்பியோடியதாக தகவல் பரவி வருகிறது. பாலியல் புகார் தொடர்பாக, கூடலூர் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு தொடரப்பட்டு விஜய் ரத்தினம் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
கோவை மத்திய சிறைக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் காந்திபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. கோவை மத்திய சிறையில் உள்ள நன்னடத்தை கைதிகளுக்கு, சிறைத்துறை நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டீக்கடை, சலூன் கடை, பெட்ரோல் பங்க் போன்றவற்றில் பணி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கைதிகள் அவர்களுக்கான வருவாயையும் ஈட்டிக் கொள்கின்றனர்.
இதையும் படிங்க:சிகிச்சைக்கு வந்த மூதாட்டியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள வற்புறுத்தும் அரசு மருத்துவர் - வைரலாகும் ஆடியோ!
அந்த வகையில், போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருந்த விஜய் ரத்தினத்திற்கு கோவை மத்திய சிறை நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் இரவு நேர பணி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சக கைதிகளுடன் விஜய் ரத்தினம் வேலைக்கு சென்று உள்ளார்.
இந்நிலையில், அனைத்து கைதிகளுக்கும் வேலை நேரம் முடிந்த நிலையில், அவர்களை சிறைக்கு அழைத்து செல்வதற்காக போலீசார் பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளனர். மேலும், பணியில் இருந்தவர்களின் எண்ணிக்கையை எண்ணி பார்க்கும் போது ஒரு கைதி குறைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, போலீசார் விசாரித்ததில் விஜய் ரத்தினத்தை காணவில்லை என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, அவருடன் பணியாற்றிய சக கைதிகளை விசாரணை செய்ததில், காலை சுமார் 5:30 மணியளவில் இருந்து அவர் காணவில்லை என தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும், இது குறித்து காட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:“தமிழகத்தில் புதிதாக போதை ஒழிப்பு காவலர்கள் பிரிவை உருவாக்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்