கோயம்புத்தூர்: நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர்வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "கோயம்புத்தூரில் சரியான முறையில் குடிநீர் வழங்கப்படுவதில்லை. 10 நாட்களுக்கு ஒரு முறை தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகின்றது.
கோவைக்கு சிறப்பு கவனம் தேவை: மேலும் தரமற்ற சாலைகளால் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. கோயம்புத்தூருக்கு அதிக மக்கள் வந்த நிலை மாறி, இப்போது கோயம்புத்தூரில் இருந்து மக்கள் வெளியேறும் நிலை உருவாகி உள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களும் வெளியேறி வருகின்றனர். கோயம்புத்தூர் மாநகருக்கு முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தடாகம் பகுதியில் இயற்கை வளங்கள் கொள்ளையடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்:வரும் ஐனவரி 7,8 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகின்ற நிலையில் அதற்கு முன்பாக தமிழகத்தில் இருக்கும் தொழிற்கூடங்களை தக்க வைக்க வேண்டும். பல்வேறு நெருக்கடிகளால் 50 சதவீத சிறு மற்றும் குறு தொழில் கூடங்கள் மூடப்பட்டு உள்ளன. இதற்கு காரணமான மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். இதை செய்தால் தான் 2030க்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் மாநிலமாக மாற்ற முடியும்.
ஆளுநர் தடையாக இருக்கக்கூடாது:ஆளுநர், முதலமைச்சர் ஆகிய இருவரும் சேர்ந்து செயல்பட்டால் தான் தமிழகத்தில் வளர்ச்சி மேம்படும். ஆளுநர் எந்த ஈகோவும் இல்லாமல், மக்களின் நலன் கருதி செயல் பட வேண்டும். மசோதாக்களை தாமதப்படுத்தக் கூடாது. ஜனாதிபதி மற்றும் நீதிபதிகளை போல ஆளுநர் செயல்பட வேண்டும். தமிழக அரசு தீர்மானத்தை 2-3 ஆண்டுகள் தேக்கி வைக்கக்கூடாது.
ஆளுநர் நடுநிலையாக செயல்பட வேண்டும், அதுதான் ஆளுநருக்கு அழகு எனவும், அரசியல் சாசன பொறுப்பில் உள்ள ஆளுநர் எந்த கொள்கையும் பேச கூடாது. சில நேரங்களில் அதையும் மீறி பேசுவது தவறு. தமிழக அரசின் நலனுக்கு ஆளுநர் தடையாக இருக்கக்கூடாது.