கோவை ஓவியருக்கு ‘மன் கி பாத் - மனதின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி பாராட்டு! கோயம்புத்தூர்:'மன் கி பாத்' எனும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் பாரத பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும், பொதுமக்களுடன் பேசி வருகிறார். இந்நிகழ்ச்சியில் சமூகத்தின் முக்கிய பிரச்னைகள், அதற்கான தீர்வுகள், நாடு முழுவதும் பல்வேறு துறை சார்ந்த சாதனையார்கள், சிறந்த கண்டுபிடிப்புகளை பாராட்டி வருகிறார்.
அதன்படி இன்று (ஜூலை 30) மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமை ஒளிபரப்பு செய்யப்பட்ட 103 வது மனதின் குரல் நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் சார்ந்து பிரதமர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஓவியர் சுரேஷ் ராகவன் செய்து வரும் 'அழிந்து வரும் உயிரினங்கள் குறித்த ஓவிய ஆவண' முயற்சி குறித்து அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து ஓவியர் சுரேஷ் கூறுகையில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்து தன்னுடைய ஓவிய முயற்சி குறித்து பிரதமர், மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருப்பது தனக்கும் தனது முயற்சிக்குமான மிகப் பெரிய அங்கீகாரம்” என தெரிவித்தார். 59 வயதாகும் இவர், பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியா நிறுவனத்தில் ஓவியராக பணிபுரிந்து வருகிறார்.
இதையும் படிங்க:‘நன்னன் புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்படும்’ - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!
ஓய்வு நேரத்தில் அழியும் தருவாயில் உள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களை தத்துரூபமான ஓவியமாக வரைந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 350 க்கும் மேற்பட்ட ஓவியங்களை இவர் வரைந்துள்ளார். குறிப்பாக, இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களை மிகத் துல்லியமாக உரிய தகவல்களோடு ஓவியமாக வரைந்து ஆவணப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ஈடிவி பாரத்தில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சிறப்பு செய்தி தொகுப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இவரது முயற்சி குறித்து பிரதமர் நரேந்திரமோடி பேசி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், தன்னுடைய முயற்சியை மக்களுக்கு கொண்டு சேர்த்த ஈடிவி பாரத்திற்கு நன்றி தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், தாவரங்கள், பறவைகள், விலங்குகள் உட்பட அனைத்து இயற்கை வளங்களையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இந்த ஓவியங்களை வரைந்துள்ளதாக இவர் கூறுகிறார். மேலும், அடுத்த தலைமுறையினருக்கு அழிந்து வரும் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஓவியங்களை பள்ளி மற்றும் கல்லூரிகளில் காட்சிப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பிரதமரின் பாராட்டு வார்த்தைகள் என்னை மேலும் இத்துறையில் உற்சாகமாக ஈடுபட வைத்துள்ளது எனக் கூறினார். இவருக்கு மக்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:லஞ்சம் வாங்கிய புகாரில் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்!