நாளக்கு நாள் வாகன விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. இந்த வாகன விபத்தினால் பலர் கால்களை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது. இப்படி விபத்தில் சிக்கும் நபர்களை செயற்கைக்கால் பொருத்தச் சென்னை செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதற்குத் தீர்வு காணும் வகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயற்கை கால் தயாரிக்கும் நிலையம் பணி நடைபெற்று வந்தது.
இதற்காகக் கோவை அரசு மருத்துவமனை முட நீக்கியல், விபத்து சிகிச்சை துறை இயக்குநர் வெற்றிவேல் செழியன் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவான செயற்கை கை, கால்கள் தயாரிக்கும் மையத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று (ஆகஸ்ட்23) தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதில், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், காளிதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிளாஸ்மா சிகிச்சைக்காக இரத்த தானம் செய்தவர்களுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்த செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் மையத்தின் மூலம் விபத்தினால் கை, கால் இழந்தவர்கள் செயற்கை உடற்பாகங்களை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் இலவசமாகச் சிகிச்சை பெறலாம். செயற்கை உறுப்புகளைப் பொருத்திய பிறகு, யார் துணையும் இல்லாமல் தானாக நடக்கும் அளவுக்குப் பயிற்சி அளிக்கவும் பிரத்தியேகமாக 10 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பயன்பெறுவார்கள்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு மருத்துவமனை முதல்வர், ஈ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர், மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினர்.
இதையும் படிங்க:தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கே விஸ்வாசமாக இருக்க வேண்டும் - ஓபிஎஸ்