கோயம்புத்தூர்: சிவானந்தா காலனி கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி நடராஜன் (66). இவர், நான்கு சக்கர தள்ளுவண்டியில் அப்பகுதியிலுள்ள ரயில்வே பாலத்தின்கீழ் சென்றுகொண்டிருந்தார். அப்போது, திமுக கட்சி கொடி பொருத்திய கார் ஒன்று அவர் மீது மோதியது.
இதில், நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அங்கு திரண்ட அவரது உறவினர்கள், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் குபேரசம்பத்தை அடித்து உதைத்தனர். இது குறித்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல் துறையினர், உறவினர்களை சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்தக் கார் ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மனைவி உமாமகேஸ்வரி என்பவருக்குச் சொந்தமானது என்பதும், சர்வீஸ் விடுவதற்காக ஓட்டுநர் காரை எடுத்துச் சென்றபோது விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது.