கோயம்புத்தூர்: கோவை காந்திபுரம் ஜோஸ்ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி அதிகாலை 200 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது. தனிப்படை போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கொள்ளையடிக்க வந்த நபர் பொள்ளாச்சி பகுதியில் இருந்து வந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
குறிப்பாக நகைக்கடையில் திருடிய நபர் அவரது சட்டையை வைத்து முகத்தை மறைத்துக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் கொள்ளை அடித்து முடித்துவிட்டு வெளியில் வந்த பின், அந்த நபர் சட்டையை துணிக்கடை வாயிலேயே போட்டுவிட்டு, வேறு சட்டை அணிந்து கொண்டு நகைகளுடன் கிளம்பிச் சென்றது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அந்தச் சட்டையில் இருந்த பேருந்து டிக்கெட்டுகளை தனிப்படை போலீசார் கைப்பற்றினர்.
கைப்பற்றிய பேருந்து டிக்கெட்டுகள் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரித்த போது, பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வரை ஒரு பேருந்திலும், கிணத்துக்கடவிலிருந்து கோவை வரை ஒரு பேருந்திலும் வந்திருப்பது தெரிய வந்தது. மேலும் நகைக்கடையில் கொள்ளை அடித்த பின் காந்திபுரம் நகை கடையில் இருந்து ஆட்டோ மூலம் உக்கடம் பேருந்து நிலையம் சென்ற அந்த நபர், அங்கிருந்து பேருந்து மூலம் பொள்ளாச்சி கிளம்பி சென்றிருப்பதும், உக்கடம் பேருந்து நிலையத்தில் ஏறிய அவர் சிறிது நேரத்திலேயே கரும்புக்கடை பேருந்து நிறுத்தத்தில் அந்த பேருந்தில் இருந்து இறங்கி நடந்துச்சென்று வேறு பேருந்து மூலம் ஏறி சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.