கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது ஆம்னி கார் திருடு போனதாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சூலூர் காவல் ஆய்வாளர் தங்கராஜ் தலைமையிலான காவல் துறையினர் காங்கேயம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஆம்னி காரில் வந்து முன்னுக்குப் பின் முரணாக பேசிய மதுரையைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இதில், கார்களைத் திருடி அதனை பரமேஸ்வரன் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட கார்களை இவர் திருடியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பரமேஸ்வரனை கைது செய்த சூலூர் காவல் துறையினர், அவரிடமிருந்து ஆம்னி காரையும் பறிமுதல் செய்தனர்.