கோயம்புத்தூர்:தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் - விமலா தம்பதியினர். கோயம்புத்தூர் மாநகரம் தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது குடியிருப்பு செங்கல் சூளையிலேயே அமைந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை (ஆகஸ்ட். 21) இரவு ஈஸ்வரன் வீட்டின் முன்பு உள்ள செங்கல் சூளையில் செம்மண் கலக்கி கொண்டு இருந்து உள்ளார்.
அவரது மனைவி விமலா ஈஸ்வரனுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென அங்கு இரண்டு காட்டு யானைகள் வந்துள்ளது. அதில் ஒரு ஆண் காட்டு யானை ஈஸ்வரனை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. யானையை பார்த்ததும் விமலா வீட்டிற்குள் ஓடிச் சென்றுள்ளார். பின்னர் யானை வந்தது குறித்து அவர் சத்தமிட்டு உள்ளார்.
அருகில் இருந்த சக தொழிலாளிகள் அங்கு வந்து ஒலி எழுப்பி யானைகளை துரத்தினர். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து உள்ளனர். தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் அருகில் இருந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதனைத் தொடர்ந்து ஈஸ்வரனை மீட்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஈஸ்வரனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவரகள், ஈஸ்வரனுக்கு வலது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டதற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.