ஒன்றிய அரசு கடந்தாண்டு கொண்டுவந்த சிஏஏ குடியுரிமை சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய மக்கள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் போராட்டங்கள் நடத்திவந்தனர்.
தற்போது கரோனா தொற்று பரவலினால் தற்காலிகமாக சட்ட மசோதா நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் அந்தச் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று ஒன்றிய அரசு தெரிவித்ததைத் தொடர்ந்து மீண்டும் அதற்கான கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன.
இந்தச் சட்ட மசோதாவை எதிர்த்து நேற்று (ஜூன் 1) எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இன்று (ஜூன் 2) தமிழ்நாடு முஸ்லீம்லீக் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் தமுமுக வடக்கு மாவட்டத் தலைவர் அகமது கபீர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவருக்கு ஆதரவளிக்கும் வகையில் கரும்புக்கடை, ஆத்துப்பாலம், குனியமுத்தூர், செல்வபுரம், சூலூர், ஒண்டிப்புதூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் தமுமுகவினர் அவர்களது வீட்டின் முன்பு நின்று குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் வகையில் பதாகைகளை ஏந்தி எதிர்ப்புத் தெரிவித்தனர்.