கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, “தற்போது கோவையில் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. மக்கள் பயத்தில் உள்ளனர். 1998 குண்டு வெடிப்பு சம்பவம் போல நடந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது. இவ்விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை குண்டு வெடிப்பு சம்பவங்களினால் 20 ஆண்டுகள் வளர்ச்சி பின்நோக்கிசென்றுள்ளது.
ஆனாலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உளவுத்துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் எந்த வேலையும் பார்க்கவில்லை. உளவுத்துறை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. இவர்கள் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமே செய்கின்றனர். இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும்.