கோவை மாவட்ட வனப்பகுதிகளுக்கு இடையே உள்ள பாலக்காட்டு கணவாய் என்பது தமிழக - கேரளாவை இணைக்கும் வழித்தடமாகவும், யானைகளின் வாழ்விடமாகவும் இருந்து வருகிறது. மேலும் இந்தப் பகுதி முன்னொரு காலத்தில் யானைகளை பழக்கப்படுத்தி விற்கும் சந்தையாகவும் இருந்துள்ளது. அந்த வரலாற்றுத் தொடர்புகள் கோவை குமிட்டிபதி அருகே பதிமலையில் குகை ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டதாகும்.
வெண்மையான திரவியத்தைக் கொண்டு இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியத்தில் யானை ஒன்றின் மீது பாகன் அமர்ந்து செல்லும் காட்சியும், அதனைச் சுற்றி பெரிய பெரிய குறுக்கும் நெடுக்குமாக பல கோடுகளும் வரையப்பட்டுள்ளன. மேலும் தேரை முன்னும் பின்னும் வடம்பிடித்து மனிதர்கள் செல்லும் காட்சியும் அங்கு ஓவியமாக வரையப்பட்டுள்ளது. பழங்கால மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை எதிர்கால சந்ததிக்குத் தகவலாக தெரிவிக்கும் வகையில் இந்த ஓவியம் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.