குற்ற வழக்குகள் கொண்ட திமுக நிர்வாகியை பெற்றோர், ஆசிரியர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து நீக்கக் கோரி புகார் கோவை:வெள்ளலூர் அரசு மேல்நிலை பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் சங்கத் தலைவராக சுகுமார் என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சுகுமார் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இவரது குழந்தைகள் அப்பள்ளியில் படிக்காத பட்சத்தில் திமுக நிர்வாகி என்பதால் அவரை பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவராக நியமித்துள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், ”அப்பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருக்கும் சுகுமார் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மதிக்காமல் நடந்து கொள்வதாகவும், அவர் மீது கடத்தல், பண மோசடி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
எனவே தங்கள் குழந்தைகளை அப்பள்ளியில் படிக்க வைப்பதற்கே அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இது குறித்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டால், சுகுமார் தலைமை ஆசிரியரையே மதிக்காமல் நடந்து கொள்வதாக தெரிவித்தனர்.
பொதுவாக பெற்றோர், ஆசிரியர் சங்கத்தில் தேர்தல் வைத்தே தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை பின்பற்றப்படுகிறது. ஆனால் திமுக கட்சியினர் அவர்களுக்கு சாதகமான நபரை தலைவராக நியமித்துள்ளதாக கூறிய பெற்றோர்கள், நியாயமான முறையில் தேர்தல் வைத்து அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவரை தலைவராக்க வேண்டும்” என வலியுறுத்தினர். இது குறித்து பெற்றோர்கள் சார்பில் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தென்காசி பெண்ணின் மொபைல் எண்ணை தவறான செயலுக்கு பயன்படுத்திய கோவை இளைஞர் கைது!