கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டி அருகேவுள்ள தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா என்கிற ரத்தினசீலன். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக ஏராளமான ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களுடன் சிவாவின் பெற்றோர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். தனது மகன் தற்கொலைக்குக் காரணம், அவரது மனைவி விஜி பழனிச்சாமி என்பதும், ஏற்கெனவே திருமணமான அவர், விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக தனது மகனை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்தனர்.
மேலும், தனது மகனை மனரீதியாக துன்புறுத்தி தற்கொலைக்குத் தள்ளி இருப்பதாகவும் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து சிவாவின் தாய் ஈஸ்வரி கூறுகையில், “இன்ஸ்டாகிராமில் கவிதை எழுதுவதன் மூலம் எனது மகனுடன் விஜிக்கு அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை செய்து இருப்பதால், என்னைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை எனக் கூறி வீட்டில் வந்து தங்கினார்.
எனது மகனுக்கு அவரைப் பிடித்து போனதால் திருமணம் செய்துகொண்டனர். அதே வேளையில் தொடர்ந்து பணம் கேட்டு டார்ச்சர் செய்து வந்தார். அவரது டார்ச்சர் காரணமாகவே மனரீதியாக பாதிக்கப்பட்டு, எனது மகன் தற்கொலை செய்துகொண்டார்” என்றார்.
மகன் இறந்து சில தினங்கள் கழித்த பின்னரே இந்த ஆடியோக்கள் தங்களுக்கு கிடைத்ததாகவும், என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்த நிலையில் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் தாமரை மூலம் மீண்டும் காவல் துறையில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். தங்கள் மகன் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும்; தற்கொலை செய்து கொண்ட சிவாவின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
அதே சமயம், ஏற்கெனவே இந்த விஜி என்கிற விஜயலட்சுமியால் தனது குடும்பம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கவிஞர் தாமரை முகநூலில் தெரிவித்துள்ளார். தாமரையின் கணவர் தமிழ்த்தேசியவாதியான தியாகுவிற்கும், விஜயலட்சுமிக்கும் ஏற்பட்ட திருமணத்தை மீறிய தொடர்பு காரணமாக, தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும், இந்த விஜி என்கிற விஜயலட்சுமி குறித்து கவிஞர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க:மனைவியை தாலிக்கயிறுகொண்டு நெரித்துக்கொன்ற குடிமகனுக்கு ஆயுள்: நடந்தது என்ன?