கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள சங்கமம் கலைக்குழு சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், கும்மியாட்டம், காவடியாட்டம், வள்ளிகும்மி உள்ளிட்ட கலைகள் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்டுவருகின்றன.
இதனை கருமத்தம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று சங்கமம் கலைக்குழுவின் தலைவரும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியருமான கனகராஜ் இலவசமாகப் பயிற்சி அளித்துவருகிறார்.
ஒயிலாட்ட அரங்கேற்றத்தில் மூன்று வயது குழந்தைகள் இதுவரை கருமத்தம்பட்டி, செம்மாண்டம் பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டேருக்கு இந்தக் கலைகளைக் கற்றுக் கொடுத்துள்ளார். இந்நிலையில், சங்கமம் கலைக்குழுவின் 27ஆவது ஒயிலாட்ட அரங்கேற்றம் கோவை மாவட்டத்தில் உள்ள கருப்பராயன் பாளையம் கிராமத்தில் நேற்று (டிச. 24) நடைபெற்றது. இதில் மூன்று வயது குழந்தைகள் முதல் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர்கள் வரை 54 பேர் அரங்கேற்றம் செய்தனர்.
கிராமத்தின் மத்தியில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மைதானத்தில் பம்பை இசைக்கு ஏற்ப அவர்கள் வளைந்து நெளிந்து ஆடிய காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பம்பை இசை மெதுவாக ஆரம்பித்து இறுதியில் வேகம் எடுக்கும்போது அவர்களின் நடனம் வேகம் எடுக்கிறது.
மேலும் ஒயிலாட்டத்தின்போது கிராமிய பாடல்களுடன் கரோனா விழிப்புணர்வுப் பாடல்களும் பாடப்பட்டன. அதில், பொது இடங்களில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், பொது இடங்களுக்கு முகக்கவசம் அணிந்து செல்வது குறித்த விழிப்புணர்வு தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
புத்துணர்வு ஊட்டும் ஒயிலாட்ட பயிற்சி! கரோனா காலங்களில் மன அழுத்தத்துடன் வீட்டில் இருந்த தங்களுக்கு இந்த ஒயிலாட்ட பயிற்சி புத்துணர்வை தந்துள்ளதாகவும், ஒயிலாட்டம் ஆடும்போதும் உடலின் அனைத்து பாகங்களும் வேலை செய்வதால் உடற்பயிற்சி செய்த பலனும் நடனங்களைக் கவனமாக கையாளுவதால் ஞாபகசக்தியும் அதிகரிப்பதாக அரங்கேற்றத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.