கோயம்புத்தூர்:ஆனைமலைப் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் நவமலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஒற்றை காட்டு யானை சாலையில் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு கார்களை சேதப்படுத்தியதில் ஒருவர் காயமடைந்தார். நேற்று (மார்ச் 19) மாலை நவமலைக்குச் சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்து தாக்கி, கண்ணாடிகளை உடைத்தது. இந்தநிலையில், காட்டு யானையை வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு வாகனங்களில் 20 பேர் கொண்ட குழு சுழற்சி முறையில் காட்டு யானையை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நவமலைக்கு அரசுப்பேருந்து மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் வெளியாட்கள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுப்பேருந்தில் செல்பவர்கள் அடையாள அட்டை காண்பித்தால் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதியை ஒட்டி வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மாயமான மயிலாப்பூர் மயில் சிலை: தெப்பக்குளத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஆய்வு செய்யத்திட்டம்!