தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் விஷயத்தில் திமுக பகல் நாடகம் - ஓபிஎஸ்

நீட் விவகாரத்தில் திமுக பகல் நாடகம் நடத்துவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டினார்.

By

Published : Feb 8, 2022, 8:53 AM IST

Updated : Feb 8, 2022, 9:35 AM IST

நீட் விஷயத்தில் திமுக பகல் நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறது - ஒ.பி.எஸ்
நீட் விஷயத்தில் திமுக பகல் நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறது - ஒ.பி.எஸ்

வேலூர்:வேலூர் மாநகராட்சி மாமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்ரவரி 7) வேலூர் அலமேலுங்காபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி

அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளியவர்கள் பயன்பெறுவதற்காகப் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தவர் ஜெயலலிதா. பல்வேறு நிலைகளிலும் சாதனை நிறைந்த, யாராலும் குறை கூற முடியாத ஒரு ஆட்சியாகப் பத்தாண்டு காலம் இருந்தது.

தேர்தல் பரப்புரையின்போது ஸ்டாலினும், திமுகவினரும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வீதிவீதியாகக் கூறி மிகப் பெரிய பரப்புரையைச் செய்து மக்களை நம்பவைத்து வாக்குகளைப் பெற்று இன்று ஆட்சியைப் பிடித்துள்ளனர்.

10 மாத கால இந்த திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உருமாறி இருக்கிறது. அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை முழுமையாக அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருவோம் என்று கூறினார்கள், ஆனால் தந்தார்களா?

நீட்டிற்கு அஸ்திவாரம் போட்டது திமுக

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை உடனடியாக ரத்துசெய்வோம் என்றார்கள். ஆனால், இந்தத் தேர்விற்கு அஸ்திவாரம் போட்டதே திமுகதான். 2010ஆம் ஆண்டு திமுக-காங்கிரஸ் கூட்டணியில் அமைச்சர் காந்திசெல்வன்தான் நீட் தேர்வுக்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.

இவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்துவிட்டு திமுக பகல் நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறது. அவர்கள் போட்ட விதையால்தான் இன்றைக்கு அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களின் மருத்துவர் கனவு பறிபோய் கொண்டிருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு அளித்த 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டின் காரணமாக இன்று 531 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில்கின்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுதான் ஒரு நல்ல அரசு செய்யக்கூடிய வேலை.

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப்பேரவையில் நாமும் (அதிமுக) தீர்மானம் போட்டோம். அது ஆளுநருக்கு அனுப்பி குடியரசுத் தலைவருக்குச் சென்றது, ஆனால் அங்கு மறுக்கப்பட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் சட்டப்பேரவையில் ஏக மனதாக நாமும் சேர்ந்து தீர்மானம் இயற்றினோம் அவர் சில விளக்கங்களைக் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளார்.


விளம்பர அரசியல்

உரிய விளக்கங்களைக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மாநில அரசுக்கு உள்ளது. அதைச் செய்வதை விட்டுவிட்டு சட்டப்பேரவையைக் கூட்டுகின்றனர்.

அங்கு என்ன விளக்கம் அளிக்கப் போகின்றனர் என்பது தெரியவில்லை. ஆளுநர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் தந்தால் அவர் மறுபரிசீலனை செய்து டெல்லிக்கு அனுப்பக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதுதான் முறைப்படி ஒரு அரசு செய்யக்கூடிய பணி. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையை ஐந்து ரூபாய் என்றும் நான்கு ரூபாய் என்றும் குறைப்பதாகக் கூறினர்.

ஆனால், தமிழ்நாடு தவிர ஏனைய மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசலுக்கான விலையை உங்களால் குறைக்கவும் முடியாது ஏனென்றால் யாருக்கும் நிர்வாகத் திறமை கிடையாது. நீங்கள் விளம்பர அரசியல், விளம்பர நிர்வாகம் செய்துவருகின்றீர்கள். மேலும் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாததால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க:முத்து நகரத்தின் தேர்தல் யுத்தம்: காலையில் எடப்பாடி பழனிசாமி, மாலையில் கனிமொழி பரப்புரை

Last Updated : Feb 8, 2022, 9:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details