கோவை மாநகரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை மற்றும் பவானி அணைகள் இருந்து வருகின்றன. கேரள மாநிலத்திற்கு உட்பட்ட முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, புதூர் அருகே கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சிறுவாணி அணையும், கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள பில்லூர் அணையும் கோவையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி பவானி ஆற்றின் குறுக்கே 4 தடுப்பணையை கேரள அரசு கட்டியது.
இந்நிலையில் தற்போது சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு துவக்கியுள்ளது. அட்டப்பாடி கூலிகடவு - சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
ஆற்றை மறித்து கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் அளவிற்கு முடிவடைந்துள்ளது. மேலும் 2 இடங்களில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கேரள அரசு திட்டமிட்டது குறித்து ஈடிவி பாரத் பிரத்யேக செய்தி வெளியிட்டது.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும், தமிழ்நாடு அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதைத் தடுக்க கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் கேரள அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து முதல் கட்டமாக கேரள மாநில பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம் 26ஆம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு, கேரள மாநிலப் பேருந்தை சிறை பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி போராட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கேரள மாநிலப் பேருந்தை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இது குறித்து போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் கு.ராமகிருட்டிணன் கூறுகையில், ”கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணையின் நீர் மட்டத்தை 50 அடியாக உயர்த்த வேண்டும். சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். தமிழ்நாடு அரசு உடனடியாக தடுப்பணை கட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசின் எதிர்ப்பை மீறி கேரள அரசு தடுப்பணை கட்டினால் கேரள எல்லையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு - கோவை விவசாயிகள் வேதனை!
இதையும் படிங்க: TN Anganwadi: கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!