கோயம்புத்தூர்:கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கடந்த அக்டோபர் 23 ஆம் தேதியன்று அதிகாலையில் மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், உக்கடம் ஜி.எம் நகரை சார்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட போது காவல் துறையினர் சுமார் 75 கிலோ வெடி மருந்துகள், ISIS தொடர்புடைய சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில், மேலும் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
மேலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவ 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக விசாரணையை நடத்தி வந்தனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஜமேசா முபின் ஐஎஸ் (ISIS) இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் என்ஐஏ (NIA) தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவேன் என உறுதிமொழியும் எடுத்துள்ளார் எனவும், இதற்கு கைது செய்யப்பட்ட 6 பேர் உடந்தையாக இருந்து சதி செயலில் ஈடுபட்டதாகவும், ஆன்லைனில் வெடிபொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஜமேசா மூபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதாக முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ்கான், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி ஆகிய 5 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.