கோயம்புத்தூர்:உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் முன்பு, ஞாயிற்றுக்கிழமை (அக் 23) கார் வெடித்து சிதறியதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். இதுதொடர்பாக உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து கோவை உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27) மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேர் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்குப்பதவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மேலும் ஜமேசாவிற்கு உதவியதாக பத்துக்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜமேசாவின் நெருங்கிய உறவினரான அப்சர்கான் என்பவரை தனிப்படை காவல்துறையினர் இரண்டு நாட்களாக விசாரித்து வந்த நிலையில், அப்சர்கான் நேற்று இரவு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 28 வயதான அப்சர்கான் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து பல்வேறு இணைய தளங்கள் வாயிலாக வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்கியுள்ளார். மேலும் காரில் சிலிண்டரை வெடிக்க வைப்பது குறித்து யூட்யூபில் தொடர்ந்து பல்வேறு தகவல்களை திரட்டியதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்; முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..!