அதிக சுற்றுலா தளங்களைக் கொண்ட மாவட்டமான கோவையில் நாள்தோறும் வெளி மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
வால்பாறை, ஆழியாறு அணை, கோவை குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களைக் கொண்ட இம்மாவட்டத்தில் சுற்றுலா மையம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் ஒருநாள் சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, காலை 7 மணிக்கு தொடங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பயணம், குரங்கு அருவி, பாலாஜி கோயில், வால்பாறை மற்றும் ஆழியாறு உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைப் பார்த்த பின்னர் மீண்டும் இரவு 8 மணிக்கு கோவை வந்தடைகிறது.
காலை, மதிய உணவு, தேனீர் என பயணிகளுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயனத்திற்காக 1,100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.